உ சிவமயம் அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டேஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய
   
  அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம்
  திருக்கார்த்திகை விரதம்
 

கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி திதியும், கார்த்திகை நட்சத்திரமும் கூடிய திருக்கார்த்திகை நாளில் கோயில்களிலும், வீடுகளிலும் இடம் பெறும் சிறப்பான தீபத் திருவிழாவாகும். இத் திருநாள் இந்த வருடம் 21.11.2010 ஞாயிற்றுக் கிழமை அன்று அமைவதாக கணிக்கப்பெற்றுள்ளது.

கார்த்திகை மாதம் பெளர்ணமி நாளில் கார்த்திகை நட்சத்திரம் வருவதால் இம்மாதம் கார்த்திகை எனப்பெயர் பெற்றது. கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது. இந்த அழல் வழிபாடு தரிசனம் திருவண்ணாமலையில் சிறப்பாகக் கொண்டாடப் பெறுகின்றது. அன்றைய தினம் திருவண்ணாமலை அழற் சோதி மலையாய், அருணாசலமாய், சோணகிரியாய் இலங்கும். [அருணம், சோணம் - சிகப்பு நிறம்]

"ஆடிப்பாடி அண்ணாமலை தொழ ஓடிப்போம் நமதுள்ள வினைகளே" என்கின்றனர் அப்பர் சுவாமிகள். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்படுவதற்கான புராண வரலாறு மிகவும் பிரசித்தமானது. 

திருவண்ணாமலை புண்ணிய பூமி. ஆன்மிக பூமி. யோகிகள், ஞானிகள்,  தபோதனர்கள், சித்தர்கள் வாழ்ந்த வாழ்கின்ற பூமி. தன்னை நாடி வந்தவர்க்கெல்லாம் அருள் வழங்கும் மலை. ஜாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி அனைவருக்கும் முக்தி தரும் மலை. உலகப் புகழ் பெற்ற தீப தரிசனம், பௌர்ணமி புகழ் கிரிவலம் வரும் மலை திருவண்ணாமலையாகும். 

அடி முடி காணமுடியாத அனற் பிழம்பாகத் திருவண்ணாமலையில் எம்பெருமான் எழுந்தருளியுள்ள தத்துவத்தை உலகிர்க்கு உணர்த்தவே திருமாலும் நான்முகனும் எம் பெருமானின் அடிமுடி தேடினர் என்று சொல்லப்படுகிறது.

படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பலவருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தைத்தை அடக்க எண்ணிய சிவபெருமான் இவர்கள் முன் சோதிப்பிழம்பாகத் தோன்றினார். அடியையும் முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. அவ் ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவை வடிவங் கொண்டு சதுரமுகப் பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக்காண திருமால், வராஹ் அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார்.

அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கினார் எம்பெருமான். அதனால் ருவரும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். . அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்டிச்சியருளினார். இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும்.

அண்ணாமலையான்யோக நெறியால் அன்றிக் காணமுடியாத தெய்வ ஒளியைக் திருவண்ணாமலையில் ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரத்தில் உள்ள மலைமேல் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காணலாம்.  

காந்த மலையிலே கலியுக தெய்வம் அருள்மிகு ஐயப்பனின் மகர ஜோதி!
திருவண்ணாமலையிலே அவர்தம் ஐயனின் அண்ணாமலை ஜோதி! 

மலை மீது காணப்படும் பெரும் செப்புக் கொப்பரையில் இருபத்து நான்கு முழம் துணி திரியாகப் போடப்படும். ஒரு மணங்கு கற்பூரத் தூள் சேர்த்துத் திரி சுற்றப்பட்டிருக்கும். இருபது மணங்கு நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுவார்கள். அந்த ஜோதியைக் காண்பதற்கு பஞ்ச மூர்த்தியும் எழுந்தருளுவதாக ஐதீகம். 

இச்சோதியானது பல மைல்களுக்கு அப்பால் பல நாட்கள் ஒளிவீசும். இவ்வொளி இம்மலையை அடுத்து யாவும் செந்நிற சிகப்பு நிறம் பொருந்தி வண்ணமாய் ஒளிர்ந்திடும்.  ஜோதிலிங்கமாக காட்சி தரும் திருவாண்ணாமலை ஓர் அக்கினித் தலமாக விளங்குகிறது.

திருவண்ணாமலையில் குன்றின் சிகரத்தில் கார்த்திகை மாதத்தில் ஏற்றப்படும் ஜோதியானது, உலகம் முழுதும் உள்ள அஞ்ஞான இருளை அகற்றி மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் என்பது ஐதீகம்.  "உடம்பெனு மனையகத்து உள்ளமே தகழியாக மடம்படும் உணர்நெய்யட்டி உயிரெனும் திரிமயக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கிற் கடம்பமர் காளைத்தாதை கழலடி காணலாமே." 

அன்றைய தினம் பக்த கோடிகள் ஜோதியைக் கண்டு சேவிப்பதால் பஞ்ச மூர்த்திகளின் அருட்கடாட்சத்தால் பஞ்சேந்திரியங்களை அடக்கும் ஆற்றல் பெற்று, மெய்ஞான சிந்தையுடையவர்களாக விளங்குவர் என்பது உட்பொருள். இந்த ஜோதியின் காரணமாகத்தான் மற்ற இடங்களில் சொக்கப்பனை கொளுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. 

தீபம் ஏற்றி வழிபட முடியாத சிவ, விஷ்ணு ஆலயங்களின் முன்புறத்தே வாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றி அடைத்து "சொக்கப்பானை"க்கு அக்கினியிட்டு சோதி வடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான் சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவு கூர்ந்து வழிபடுவர். ஜோதி மயமாய் ஒளி வடிவினனாகிய இறைவனை உணர்த்தும். சொக்கப்பனாகிய சிவனை ஒளி வடிவாகக் காண்பிப்பதால் இது சொக்கப்பனை எனப் பெயர் பெற்றது. திரு

சிவபெருமான் கோயில் கொண்டுள்ள ஆயிரத்தெட்டு முக்கிய ஸ்தலங்களில் காசி, சிதம்பரம், திருவாருர், திருவண்ணாமலை, காளஹஸ்தி ஆகிய ஐந்து க்ஷேத்திரங்களும் பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகக் கொண்டாடப்படுகின்றன. பிருத்வி, அப்பு, தேயு, வாயு,ஆகாசம் ஆகியவை பிருத்வி பஞ்சமூர்த்தி ஸ்தலங்களாகும். 

உலகத்திலேயே புண்ணியத் தலங்களுள் காசிக்குப் போவதே தலையாயப் புண்ணியமாக கருதுவர். திருவாரூரில் பிறந்தலே  முத்தி கிடைக்கும் என்பர். ஆனால் இருந்த இடத்தில் இருந்தபடிமனதால் நினைத்தாலே புண்ணியம் தரும் ஸ்தலம் ஒன்று உலகில் உள்ளதென்றால் அது அண்ணாமலையாரும் உண்ணாமுலை அம்மனும் குடிகொண்டிருக்கும் திருவண்ணாமலைதான்.

பழந்தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தில், ''வேலின் நோக்கிய விளக்க நிலையும்'' என்பதற்குக் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு என்பது பொருள். பண்டைக் காலம் தொட்டே கார்த்திகை விழா ஒரு பெரும் பண்டிகையாக நம்மவர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள். பழைய காலங்களில் மலைச் சிகரங்களில் விளக்கேற்றி விழா கொண்டாடி விருந்துண்டு, களிகொண்டு ஆடி களித்திருப்பதை சங்க நூற்களில் சான்று உண்டு. ஆகவே, மேற்கூறியதிலிருந்து கார்த்திகை விழா நமது ஆணவ இருளைப் போக்கி ஞான ஒளியைப் பெருக்குவதற்கு உகந்த விழாவாகும் என்பது விளங்குகிறது.

அக்கினியின் சக்தியால் அழுக்கு களையப்படுகிறது. அக்கினிப் பிரவேசம் சீதா பிராட்டியை புனிதவதி எனக் காட்டியதாக இராமயணம் உலக்குக்கு உணர்த்தியது. ஹோமத்தில் எழுகின்ற அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கின்றோம். கார்த்திகை மாதம் முதல் தேதி தொட்டு கடைசி நாள் வரை தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வைத்துக் கொண்டாடுவர்.

தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய மூன்று தினங்களிலாவது தவறாது எண்ணெய் விளக்கேற்ற வேண்டும். கார்த்திகைமாதம் 1, 28 ஆகிய இரு தேதிகளில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின் 28-ம் தேதி வரும் நட்சத்திரத்தில்தான் திருக்கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்பட வேண்டும்.

 

இந்த கார்த்திகைத் திருநாள் கார்த்திகேயனுக்கும் உகந்த நாள். சிவபெருமானின் நெற்றிக் கண்ணினின்றும் தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப் பொய்கையில் வந்து தங்கி ஆறு குழந்தைகளாக உருமாறி நிற்க அக்குழந்தைகளைக் கார்த்திகைப் பெண்கள் பாலுட்டிச் சீராட்டித் தாலாட்டினர்.

சிவபெருமான் பிராட்டியாருடன் சரவணப் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க, ஆறு உருவங்களும் ஓருருவாய்-ஆறுமுகக்குழந்தையாய்- தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது. அவ்வமயம் கார்த்திகைப் பெண்டிர் சிவபெருமானைப் பணிந்து போற்றி நின்றனர்.

சிவபெருமான் அவர்களை அருள் நோக்கி" உங்களுக்கு மங்களம் உண்டாகுக! உங்களால் வளர்க்கபட்ட இப்பாலகனுக்கு கார்த்திகேயன் என்ற திருநாமத்தைச் சூட்டுகிறோம். உங்களுக்கு உகந்த இக்கார்த்திகை நன்னாளில் கந்தனைப் போற்றி வழிபடுவோருக்கு அனைத்து நலங்களும் கிட்டுவதாகுக!" என்று திருவாய் மலர்ந்தருளினார். இறைவனை விளக்கேற்றி வழிபடுவது தொன்றுதொட்டு வந்த பழக்கமாயினும், அது என்றென்றும் நலம் தரும் வழிபாடாகவும் கருதப்படுகிறது. 

வைஷ்ணவ ஆலயங்களிலும் விளக்கொளிப் பெருமாள் என்று ஒரு பெருமானைக் கொண்டாடுகினனர். அகல், எண்ணெய், திரி, சுடரொளி ஆகிய நான்கும் அறம், பொருள். இன்பம், வீடு என்ற தத்துவங்களை உணர்துவது போலாகும். பலிமகராஜன் தனது உடம்பிலே தோன்றிய வெப்பத்தைக் கார்த்திகை விரதமிருந்து தீர்த்துக்கொண்டார் என்று புராணம் கூறுகிறது.

எம்பெருமான் தன்மீது திருவடி சாதித்து ஆட்கொண்ட போது தனது மறைவு நாளை தீபங்களை ஏற்றி உலகோர் அனைவரும் கொண்டாடவேண்டும் என்று அனந்தனைப் பணிந்த் கேட்டான். திருஞானசம்பந்தர், மயிலையில் அங்கம் பூம்பாவைக்கு புத்துயிர் அளிப்பதற்காய்ப் பாடிய திருப்பதிகத்தில்,' கார்த்திகை விளக்கீடு காணாத போதியோ' என்று பாடியுள்ளார். 

ஒருமுறை அம்பிகை மகிஷாசுரனுடன் போர்புரியும் போது தவறுதலாக சிவலிங்கம் ஒன்றை உடைத்துவிட்டார் என்றும் அதனால் ஏற்பட்ட தோஷத்தை நிவர்த்திசெய்துகொள்வதற்குக் கார்த்திகை தினத்தன்று தீபம் ஏற்றி விரதம் இருந்து பெருமானின் பேரருளால் தோஷ நிவர்த்தி கிடைத்ததாக தேவி புராணம் கூறுகிறது. 

இவ்வாறு பெருமையும் மேன்மையும் கொண்ட கார்த்திகைத் திருநாளை திருச்செங்கோடு, வேதாரண்யம் பழனி, திருச்செந்தூர் முதலிய கோயில்களில் திருவண்ணாமலைக் கோயிலைப்போன்றே கோலாகலமாகக் கொண்டாடுகின்றனர். சில ஊர்களில் மந்தாரை இலையில், தீபம் ஏற்றுகிறார்கள்.  வடநாட்டில் தீபத்தை தீப ஓடங்களில் ஏற்றி நீரில் விடுவது உடன்பிறப்பிற்கு நன்மை பயக்கும் என்று கருதுகிறார்கள்.

கார்த்திகைத் தீபங்கள் ஏற்றும் போது கூறப்படும் மந்திரம்:

கீட :பதங்கா மதகாஸ்ச வ்ருதா ஜ்லே ஸ்தயே விசரந்தி ஜீவா த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜந்ம பாகிந:

பவந்தி நித்யம் சவ பசா ஹி விப்ரா.

இந்த மந்திரத்தைச் சொல்லி விளக்கேற்றி வழிபடுவதால் இம்மையில் அனைத்து சுபீட்சங்களுடன் வாழ்ந்து எம்பெருமானின் பேரருளால் பிறவாப் பெருவாழ்வு பெறலாம் என்பது ஐதீகம். 

தீபத்தின் ஒளி காணும் இடத்தில் ஸ்ரீதேவி மங்களம் பொங்க வாசம் புரிவாள். இக்கார்த்திகை தினத்தன்று நெற்பொரி வைத்து நிவேதனம் செய்வர். கார்த்திகை விரதத்தை பன்னீரண்டு ஆண்டுகள் கடைப்பிடித்து நாரத மகரிஷி சப்தரிஷிகளுக்கும் மேலான பதவியை அடந்தார். திரிசங்கு மன்னன், பகீரதன் கிருத்திகை விரதத்தின் பயனால் பேரரசானார்கள். அனைவருக்கும் பேரருள் கிட்டுவதாகுக.

முக்தி தரும் ஷேத்திரங்கள்:  
திருவாரூரில் (கமலையில்) பிறந்தால் முக்தி
சிதம்பரத்தை (நடராஜரை) தரிசித்தால் முக்தி 
திருவண்ணாமலையை (அண்ணா மலையானை) நினைத்தாலே முக்தி
காசியில் இறந்தால் முக்தி

திருச்சிற்றம்பலம் 
 
 
   
 
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்ர் பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும்
This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free