உ சிவமயம் அருவமும் உருவும் ஆகி அனாதியாய்ப் பலவா யொன்றாய்ப்பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்கருணைகூர் முகங்கள் ஆறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டேஒருதிரு முருகன் வந்தாங்கு உதித்தனன் உலகம் உய்ய
   
  அருள்மிகு கதிர்வேலாயுத சுவாமி ஆலயம்
  மகாசிவராத்திரியின் மகிமை
 
மகாசிவராத்திரியின் மகிமை  
  சிவராத்திரி என்பது வெறுமனே இரவுப் பொழுதைக் குறிப்பதல்ல. சிவம் என்றால் மங்களகரமானவர் என்று பொருள்படும். ராத்ரம் என்ற சொல் நன்மைகளைக் குறிக்கிறது. திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை என்பார்கள். யார் யாரைக் காப்பாற்றுவது, யார் யாருக்கு அறிவுரை கூறி வழிகாட்டுவது, யார் யாருக்கு அன்பு பாராட்டுவது என்று எல்லோராலும் எல்லோரும் கைவிடப்பட்ட நிலையில், உலக மக்கள் அனைவரும் துன்பத்தில் நலிந்திருக்கும் போது, எல்லோருடைய ஆசைகளையும் பூர்த்தி செய்து சந்தோஷத்தை அருள்பவர் சிவபிரான். இதனாலேயே அவருக்குரிய இரவுக்கு சிவராத்திரி என்று பெயர் ஏற்பட்டது.

சிவராத்திரி வகைகள் சிவராத்திரி என்ற உடனேயே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது மாசி மாதத்தில் வருகின்ற சிவராத்திரி விரதமேயாகும். ஆனால் ஒவ்வொரு மாதமும் வருகின்ற கிருஷ்ணபட்ச சதுர்த்தசி நாள் அதாவது தேய்பிறை பதின்னான்காம் நாள் சிவனுக்குரிய இராத்திரி ஆகும். இவ்வாறு மாதமொரு சிவராத்திரி என்ற வகையில் ஒரு வருடத்தில் பன்னிரு சிவராத்திரிகள் வருகின்றன. இவை மாத சிவராத்திரிகள் என அழைக்கப்படுகின்றன. அந்நாளில் திருவாதிரை நட்சத்திரமும் கூடியிருந்தால் அது மிகச் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இம்மாத சிவராத்திரி தினங்களில் குறிப்பிட்ட சில சிவராத்திரிகள் விசேட பலன் தருவன என்பதால் விசேட பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி ""மகா சிவராத்திரி'' எனப்படுகிறது. அன்றைய தினம் வருடம் முழுவதிலும் மிகவும் கடுமையான காரிருள் சூழ்ந்த இரவுப் பொழுது நிலவும், இந்த இரவு அளப்பரிய மகிமைகள் பல பொருந்தியது என சிவமகாத்மிய நூல்கள் கூறுகின்றன. மகா சிவராத்திரி விரதத்தை அறியாமல் அனுட்டித்தவர்கள் கூட அடியார்க்கு எளியவராகிய எம் பெருமானுடைய அருளைப் பெற்றதாகசிவபுராணம் எடுத்துரைக்கிறது.

புராண ஐதீகங்கள் மகா சிவராத்திரி விரதத்தின் பின்னணியைப் பற்றிப் பல்வேறு புராணக் கதைகள் நிலவுகின்றன. பலரும் அறிந்த பிரபலமான கதை, பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்குக் கர்வம் தலைக்கேறி, அறிவு மங்கி, அறியாமையால் அவர்கள் அமைதியிழந்த போது, ஈஸ்வரன் ஆதியந்தமற்ற ஜோதியாகத் தோன்றிய கதையாகும். மேலும் சில புராணக் கதைகளும் உள்ளன.

ஒருநாள் சங்கரருடைய கண்களைப் பார்வதிதேவி விளையாட்டாகத் தன் கரங்களால் மூடினாள். அதன் விளைவாக, புவியெங்கும் அஞ்ஞான இருள் பரவியது. சில கணங்கள் தான் சங்கரருடைய கண்கள் மூடப்பட்டது. இருந்த போதிலும் உலகெங்கும் ஆத்மாக்களுடைய அகக் கண்கள் மூடப்பட்டு அறியாமை என்ற இருள் கவிந்தது. அதனால் மனிதர்கள் அனைவரும் வாழ்க்கையின் சௌபாக்கியங்களை எல்லாம் இழந்தனர். துன்பங்கள் பெருகின. அதர்மம் நிறைந்து வழிந்தது. இன்னொரு புறம் மக்கள் இறைவனையும் அவனது கருணையையும் தேடித் திரிந்தனர்.

இந்தக் காட்சியைக் காணச் சகிக்காத பார்வதி தேவி, தாயன்பு கொண்டாள். மனித ஆத்மாக்கள் மீண்டும் இக வாழ்வின் சந்தோஷத்தைப் பெற வேண்டும் என்று இரவு, பகல் பாராமல் சிவபெருமானை உள்ளன்புடன் பூஜித்தாள். எத்தனை பல இரவுகளும் பகல்களும் கழிந்த போதும் புவியெங்கும் இருள் சூழ்ந்திருந்ததால், அக்காலப் பகுதி இராத்திரி என்றே அழைக்கப்பட்டது. அன்னையின் வழிபாட்டில் மனம் மகிழ்ந்த எம்பெருமான், மீண்டும் சகலரும் பூலோகத்தில் துன்பமில்லாத சுகவாழ்வு பெற வரமளித்தார் என்பது புராண ஐதீகம். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது கொடூரமான ஆலகால விஷம் தோன்றியது. அதற்கு அஞ்சி, மும்மூர்த்திகள் உட்படத் தேவ, தேவியர் அனைவரும் கருணைக் கடலாகிய சிவபிரானிடம் தஞ்சமடைந்தனர். மனமிரங்கிய எம்பிரான் விஷத்தைத் தானே உட்கொண்டார். அவரது கழுத்திலே தங்கி விட்ட விஷம் மேலும் பரவாதிருப்பதற்காக தெய்வங்கள் அனைவரும் இரவெல்லாம் விழித்திருந்து இன்பகரமாக ஆடிப்பாடி எம் பெருமானை மகிழ்வித்தனர். விடிந்ததும் அனைவருக்கும் எல்லையில்லாத வரங்களை அளித்து இறைவன் ஆசிர்வதித்தார். இச்சம்பவத்தை நினைவுகூரும் முகமாக அன்றைய திதி அபிடேக அர்ச்சனைகளால் இன்றளவும் கொண்டாடப்படுகிறது என்பது இன்னொரு நம்பிக்கை. இப்புராணக் கதைகளுக்கு அப்பால் பலராலும் அறியப்படாத அபூர்வமான சில உண்மைகள் புதைந்திருக்கின்றன.

இரவின் இரகசியம் நிலவின் ஒளி தேய்ந்து காரிருள் படர்ந்த மாசி மாதத்துத் தேய்பிறை பதின்னான்காம் நாள் இரவு எல்லாம் வல்ல பரம்பொருளாகிய சிவபெருமானுக்கு உரியதாகி இருக்கிறது. நவீன பொழுதுபோக்கு வசதிகள், வெகுஜனத் தொடர்பாடல் கருவிகள் எதுவும் வளர்ச்சியடைந்திருக்காத பண்டைய காலத்தில் பௌர்ணமி நாட்களே இரவு நேர நடமாட்டத்திற்கும் கேளிக்கைகளுக்கும்தெரிவு செய்யப்பட்டன. நிலவொளியற்ற இரவுகளில் வெகு விரைவிலேயே ஊரடங்கி விடும்.

அக்காலப் பகுதியில் இருள் என்பது அக்கிரமங்களுக்குத் துணை போகும் முக்கிய காரணியாக இருந்தது. குறிப்பாக அமாவாசைத் தினங்கள் அதர்மச் செயல்களுக்குப் பேர் போனவையாகக் கருதப்பட்டன. பகலெல்லாம் உழைத்துக் களைத்தவர்கள், அலுத்துச் சோர்ந்து ஆழ்ந்து உறங்கும் நள்ளிரவு வேளை, அதர்மம் அதிகாரத்துடன் தலை விரித்தாடும் நேரமாக இருந்தது. இத்தகைய பயங்கரமான பொழுதை நமது புராணங்கள், அன்பேயுருவான சிவபெருமானுக்கு அர்ப்பணித்திருப்பதன் நோக்கம் சாதாரணமானதல்ல. அறியாமை என்ற அக இருளால் தர்மம் நிலைகுலையும்போது, புற வாழ்வில் துயரமும் அழிவும் இருள் போலச் சூழ்கிறது. அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலை நாட்டி அக இருள் போக்கக் கூடியவர் பரம்பொருள் ஒருவரேயாவார். நமது அவலக் குரலுக்குச் செவி சாய்த்து துன்பத்தை நீக்கி சந்தோஷத்தை ஏற்படுத்தி விட்டு மறைபவர் இனியவராகிய சிவபிரான். இவ்வகையில் அநியாயங்களின் அதி தீவிரத்தைக் குறிக்கும் அமாவாசை இரவு, நன்மை பயப்பவராகிய சிவ பிரானுக்கு உரித்தாக்கப்பட்டிருப்பதன் இரகசியம் இதுவேயாகும். சிவ மகிமையும் எளிமையும் ""சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை. அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை'' என்பது திருமந்திரம். சைவ சமயத்தவர்களுக்கு சிவபெருமானே முழு முதற் கடவுள். அவரை விட மேலானது என்று ஒன்றிருக்க முடியாது என்பதால் இறைவன் ஒருவனே என்று சைவ சமயம் கூறுகிறது.

நமது நாயன்மார்களும் சிவனடியார்களும் அவருடைய துணையையும் தமது இல்வாழ்விலேயே அனுபவித்திருக்கிறார்கள். அன்புக் கடலாகிய சிவ பகவானை, தனது உறவாக குடும்பத்தில் ஒருவராக ஆசை தீர அனுபவித்தவர்கள் அவர்கள். அதன் பின், நன்றி பொங்கும் அன்புடன், அவரைப் பலவிதமாகப் போற்றியிருக்கிறார்கள். இன்று நாம் அவற்றைப் பாடல்களாகவும் பதிகங்களாகவும் ஓதிக் கொண்டிருக்கிறோம்.

மட்டற்ற எளிமையுடையவராகிய சிவன் நாயன்மார்களுக்கு மட்டும் உரியவரல்ல. அதிவேகமான ஒரு உலகத்தில் தன்னை மறந்து ஓடிக் கொண்டிருக்கும் நமக்கும் சொந்தமானவர். நம் வாழ்விலும் அசாத்தியமானவற்றைச் சாத்தியமாகச் செய்து பல அற்புதங்களைப் புரியக் கூடியவர். இதற்காக தூய்மைக் கடலாகிய சிவன், அக அழுக்குகள் நிறைந்த கலியுக இறுதியில் பூவுலகில் அவதரிக்கிறார். மென்மையாக நம்மைத் தடுத்தாட் கொண்டு நம் வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்துகிறார். இந்த சிவ அவதாரமே நம்மைச் சிவ தரிசனம் பெறச் செய்கிறது. அதன் பின் வாழ்க்கையில் நம்ப முடியாத நல்ல மாற்றங்கள் பல ஏற்படுகின்றன. சிவபெருமான் பூமியில் அவதரித்துத் தன் திருவிளையாடல்களைப் புரியும் விதம் மிகவும் அபூர்வமானது.

சிவ அவதாரம் பிறப்பு, இறப்புக்கு அப்பாற்பட்ட அவர், பூவுலகில் தாய் வயிற்றில் தோன்றித் தனக்கென ஒரு சரீர உருவம் தாங்காதவர். இருப்பினும் ஜீவாத்மாக்களுடைய நலன் கருதி பூவுலகத்தில் அவதரித்து, பிரம்மா, விஷ்ணு, சங்கரர் மூலம் முத்தொழில்களையும் ஆற்றுகிறார். அதனால் அவர் திருமூர்த்தி சிவன் எனப்படுகிறார்.

நாமும் வாழ்வில் முத்தொழில்களையும் ஆற்றுகிறோம். சிறந்த முறையில் படைத்தல், காத்தல், அழித்தலைச் செய்கின்றவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள்.

இங்கே படைத்தல் என்னும் செயற்பாடு நமக்குள்ளே ஆழத்தில் புதைந்திருக்கும் இயல்பான குணங்களாகிய அன்பு, தூய்மை, சந்தோஷம், அமைதி, ஞானம் என்பனவற்றை வெளித்தோன்றச் செய்வதாம். அழித்தல் என்பது தன்னைப் பற்றிய தவறான புரிந்துணர்வால் ஏற்பட்ட காமம், கோபம், ஆசை, அகங்காரம், பற்று ஆகியவற்றை அடியோடு அழிப்பதாகும். படைக்கப்பட்ட நற்குணங்களை அவதானமாகப் பேணிப் பராமரிப்பது காத்தல் செயற்பாடு ஆகும்.

சிவபிரான் அருளிய பிரம்ம ஞானம் இத்தகைய மகத்துவம் மிக்க ஞானம் சிவபிரானால் நேரடியாக பிரம்மனுக்குப் போதிக்கப்பட்டதாகும். மேலும் இது தேவாம்சம் பொருந்திய இராஜாக்களுக்கெல்லாம் இராஜாவாக சாதõரண மனிதனுடைய சுபாவத்தை மாற்றக் கூடிய வல்லமை பொருந்திய ஞானமாகும். மேலும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத அரசராகிய சிவ பகவானுடன் சாதாரண மனிதருக்கும் நேரடியான ஒரு தொடர்பை ஏற்படுத்தித் தர வல்ல ஞானம் சிவபெருமானுடைய அவதார மகிமையை உள்ளவாறு எடுத்துரைக்கும் ஞானத்தைப் பெற்று மனதை ஒருமுகப்படுத்தி சிவன் நினைவில் இலயிப்பது மகா சிவராத்திரி விரதிகளின் கடமையாகும். சிவபெருமான் எப்போது எவ்வாறு பிரம்ம ஞானத்தைப் போதித்தார் என்பது பலர் அறியாத இரகசியமாகும்.

பிரம்மாவின் பகல் கழிந்து பிரம்மாவின் இரவு தோன்றியதும் படைத்தல் கருவியாகிய பிரம்ம தேவர் உறக்கத்தில் ஆழ்ந்தார். அவரது விழி மூடியதும் பூவுலகெங்கும் இருள் பரவியது.

இயற்கையின் சமநிலை அறுந்தது. பஞ்ச பூதங்கள் மனிதக் கட்டுப்பாட்டிலிருந்து விலகின. பூமியெங்கும் பூகம்பங்கள், எரிமலைகள், கட்டுக்கடங்காத மழை, வெள்ளப் பெருக்கு, கடல் கொள்ளல், சூறாவளிகள் என்பன ஏற்பட ஆரம்பித்தன. தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், சடப் பொருட்கள் அனைத்தும் அழிவை நோக்கிச் சென்றன. இப்பிரளயத்தில் படிப்படியாக பூலோகம் முழுவதுமே உயிர் வாழ்க்கையின்றி அழிந்து கொண்டிருந்தது. இது ஊழிக் காலத்தை நெருங்கியது.

இவ்வாறு எத்தனையோ இரவு, பகலாக பிரம்மாவின் இரவு துன்பகரமாகக் கழிந்து கொண்டிருந்தபோது, இறைவன் பிரம்ம தேவருக்கும் தன் படைப்புக்கும் ஞானோபதேசம் செய்யத் திருவுள்ளம் கொண்டார். அதன் நிமித்தம், ஆத்மாக்களின் வீடாகிய பரந்தாமத்திற்கும் பூலோகத்துக்கும் இடையில் முழுநிலை அடைந்த பிரம்மன் உட்பட ஒளி பொருந்திய தூய சரீரம் தாங்கிய மும்மூர்த்திகளைப் படைத்தார். அதன் பின் தானே ஜோதி வடிவாக பூமியில் அவதரித்து முழு நிலை அடையாத பிரம்ம தேவருக்கும் பிரம்ம ஞானத்தைப் போதித்தார். இவ்வாறு பரமாத்மா சிவன் பூமியில் தோன்றிய நாளே சிவஜெயந்தி அல்லது சிவ அவதார நாளாகும். இதுவே இலிங்கோற்பவ காலம் என்றும் குறிப்பிடப்படுகிறது.

ஞானம் பெற்ற பிரம்மனுக்கு மூன்றாவது கண் விழித்தது. உண்மை புரிந்தது. இருள் நீங்கி ஒளி தெரிந்தது. இந்த ஞானத்தை பூமியில் வாழ்ந்த ஏனைய ஜீவாத்மாக்களுக்கும் போதிப்பதற்கு ஜோதி வடிவாகிய பரமனுக்கு ஒரு சரீரம் தேவைப்பட்டது. பரம்பொருளோ பிறப்புக்கும் இறப்புக்கும் அப்பாற்பட்டவர். அதனால், பிரம்ம தேவருடைய ஸ்தூல சரீரத்தைப் பயன்படுத்தி பிரம்மாவின் கமலவாய் மூலம் அனைவருக்கும் ஆத்ம ஞானத்தைப் போதித்தார்.

ஞானம் பெற்ற ஆத்மாக்கள் அனைவரும் மானசீகமாக மறுபிறப்பு எடுத்தனர். ஈஸ்வரனால் பிரம்மனுடைய கமலவாய் மூலம் உண்மையை உணர்த்தப்பட்டதால் அவர்கள் பிரம்மாவின் வாய்வழித் தோன்றல்கள் ஆகினர்.

ஞானம் பெற்று பழைய சரீரத்தில் புதிய வாழ்வை அடைந்த பாக்கியசாலி ஆத்மாக்கள், தேவர்களைக் காட்டிலும் அதிமேலான குலத்தைச் சேர்ந்தவர்களாக அறியப்பட்டனர். அவர்கள் ஞானத் தெளிவால் தமது வாழ்வைப் புனிதமாக்கிக் கொண்டு இராஜரிஷிகளாகப் பூமியில் சிவன் நினைவில் தவம் புரிந்தனர். பிரம்மனுடன் இணைந்து அவர்கள் தவமியற்றிய காலப் பகுதி நள்ளிரவைத் தொடர்ந்து வருகின்ற அதிகாலையில் இருள் சூழ்ந்த நேரமாகும். இதுவே பிரம்ம முகூர்த்தம் எனப்படுகிறது.

அமிர்த வேளை எனப்படும் பிரம்ம முகூர்த்தம் கழிந்ததும் யோக சக்தியின் பலனாக பிரம்மாவின் இரவு முடிந்து பிரம்மாவின் பகல் ஆரம்பமாகியது. புவியெங்கும் புதுயுகம் மலர்ந்தது. பூமியின் பொற்காலமாகிய சத்தியயுகம் பிறந்தது.

தன் அவதார நோக்கத்தைப் பூர்த்தி செய்த சிவபெருமான் பிரம்ம முகூர்த்தம் கழிந்து, பிரம்மாவின் பகல் ஆரம்பமாகும் வேளையில் மீண்டும் முக்தி தாமமாகிய பரந்தாமத்திற்குத் திரும்பினார். மனிதர்கள் தேவர்களைப் போல், அதீத இன்பத்தில் திளைத்து வாழும் சுவர்க்கலோகம் பூமியில் ஆரம்பமாகியது. பிரம்ம தேவருடன் இணைந்து சிவனை நோக்கித் தவமியற்றிய இராஜரிஷிகள், தமது பூர்வஜென்மப் புண்ணிய பலனால் நிலையான செல்வத்தையும் நீங்காத சந்தோஷத்தையும் நீடித்த ஆரோக்கியத்தையும் பெற்றுக் கொண்டு தேவலோகமாகத் திகழ்ந்த பூமியில் தேவர்களாகப் பிறந்து எல்லையில்லாத நிரந்தர மகிழ்ச்சியில் திளைத்தனர் சிவ வழிபாடு ஸ்ரீ கிருஷ்ணர் கோபேஸ்வரத்திலும் ஸ்ரீ ராமர் இராமேஸ்வரத்திலும் சிவலிங்க பூஜை செய்ததாக அத்தலங்களைப் பற்றிய புராணக் கதைகள் குறிப்பிடுகின்றன. தெய்வங்களாகக் கருதப்படும் கிருஷ்ணரும் இராமரும் சரீர உணர்வை மறந்து பணிவன்புடனும் ஆன்ம உணர்வுடனும் மனமொன்றிப் பூஜை செய்து சிவார்ச்சனையின் பலனாகக் காரிய சித்தி பெற்றனர்.

பக்திபூர்வமான உண்மையான அன்புடன் ஆற்றப்படும் போதே எந்த ஒரு விரதத்திலோ அல்லது பூஜையிலோ முழுமையான பலனைப் பெற்றுக் கொள்ளலாம். ஏனெனில் மனதில் எழும் நினைவுகளே வார்த்தைகளாகவும் செயல்களாகவும் வடிவம் பெறுகின்றன. எண்ணங்களே மூல விதையாகின்றன. தரமான விதையே பலன் தரும்.

மூன்று மணி நேரம் ஒரு ஜாமம் எனப்படுகிறது. முதல் ஜாமம் மாலை ஆறு மணிக்கு ஆரம்பமாகின்றது. மகா சிவராத்திரி அன்று முதலாம் ஜாமம் பஞ்ச கவ்வியத்தால் அபிடேகம் செய்து செம்பட்டாடை அணிவித்து பாலன்னம் நிவேதித்து சந்தனத் தூபமிட்டு விசேட பூஜையாக ஸ்நபனாபிஷேகம் செய்து சிவார்ச்சனையும் வழிபாடும் செய்ய வேண்டும்.

இரவு ஒன்பது மணிக்கு வரும் இரண்டாம் ஜாமப் பூஜையின் போது பஞ்சாமிர்தத்தால் அபிடேகம் செய்து மஞ்சள் பட்டாடை அணிவித்து பாயாசான்னம் படைத்து, அகிற் சந்தனக் கந்தத்துடன் நட்சத்திரத் தீபாராதனை செய்து வழிபட வேண்டும்.

மூன்றாம் ஜாமப் பூஜையின் போது பலோதக அபிடேகம் செய்து வெண்பட்டு வஸ்திரம் அணிவித்து எள்ளோதன நைவேத்தியத்துடனும் கஸ்தூரி சேர்த்து சந்தனக் கந்தத்துடனும் கருங்குங்கிலியத் தூபமிட்டு ஐந்து முகத் தீபõராதனை செய்ய வேண்டும். நான்காம் ஜாமம் கந்தோதக அபிடேகத்தின் பின் நீலப் பட்டுடுத்தி சுத்தான்னம் படைத்து புனுகு சேர்ந்த சந்தனக் கந்தத்துடன் லவங்கத் தூபமிட்டு வில்வ தீபம் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

வழிபாட்டின் போது உடல் அங்கங்களால் ஆற்ற வேண்டியவற்றை முறை தவறாது செய்து முடித்தாலும் ஆத்மாவின் அங்கமாகிய மனம், காதலாகிக் கசிந்து இனிமையான இறைவனின் நினைவிலே ஊறித் திளைத்திருப்பதே அதி முக்கியமானது, ஏனெனில், அதுவே நமது விரதத்தின் அல்லது பூஜையின் பிரதானமான பலனைப் பெற்றுத் தருவதாகும்.

இதனை மனதில் கொண்டு சிவந்த பொன்னிறமுடைய ஒளிப் பொட்டாகிய சிவத்தை நமது உயிராகவும் உறவாகவும் ஆக்கி, இன்றிலிருந்தே மனம் முழுவதும் அன்பை நிறைத்து எதிர்வரும் சிவராத்திரி தினத்துக்காகக் காத்திருப்போம். அன்றைய தினம் அனைவருடைய வாழ்விலும் அபரிமிதமான நிறைவு ஏற்படும் வகையில், இந்த விழிப்புணர்வை சைவ சமயிகளிடத்து ஏற்படுத்துவோமாக.
  
 
 
 
 
   
 
இறவாத இன்ப அன்பு வேண்டிப்பின் வேண்டு கின்ர் பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free