வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும், இளமையான நாகத்தையும், பன்றியினது முளை போன்ற பல்லையும் கோத்து மாலையாக அணிந்து, தசை வற்றிய பிரம கபாலத்தில் உண்பொருள் கேட்டு வந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால் தொழுது ஏத்த அவர்கட்கு அருளும் நிலையில் விடைமீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனல்லனோ!
கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இது என்ற புகழைப் பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!
பாடல் எண் : 4 |
பண் : நட்டபாடை
|
விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்
பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே .
பொழிப்புரை :
வானவெளியில் மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் கணையொன்றினால் எய்து அழித்ததுமல்லாமல், விளங்கிய பிரமகபாலமாகிய தலையோட்டில் மனமகிழ்வோடு பலியேற்க வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்த வரை போன்ற மார்பின் இடப்பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ!
பாடல் எண் : 5 |
பண் : நட்டபாடை
|
ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்
பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே
பொழிப்புரை :
ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடைமுடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப்படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், சர்வசங்கார காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக் கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ.